அமெரிக்காவின் அடுத்த நிதி அமைச்சராக பிரபல முதலீட்டாளர் ஸ்காட் பெஸென்ட் தேர்வு
பிரபல முதலீட்டாளர் ஸ்காட் பெஸென்ட்டை அமெரிக்காவின் அடுத்த நிதி அமைச்சராகத் தேர்ந்தெடுத்திருப்பதாக அந்நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப் நவம்பர் 22ஆம் திகதியன்று தெரிவித்தார்.
நிதி அமைச்சர் என்கிற முறையில் பொருளியல், நிதி ஒழுங்குமுறை, அனைத்துலக விவகாரங்கள் ஆகியவற்றில் அவருக்கு அதிக செல்வாக்கு இருக்கும்.
“அமெரிக்காவின் 79வது நிதி அமைச்சராக ஸ்காட் பெஸென்ட்டை முன்மொழிவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகின் முன்னணி முதலீட்டாளர்கள், புவிசார்ந்த அரசியல் மற்றும் பொருளியல் நிபுணர்களில் அவரும் ஒருவர்,” என்று டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் நிதி அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து திரு பெஸென்ட் உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.
அவர் இதற்கு முன்பு, வரி தொடர்பான சீர்திருத்தத்துக்குக் குரல் எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.