திருகோணமலையில் 6 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!
 
																																		திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர், பாரதிபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர், 6 நாட்களுக்குப் பின்னர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய மஹ்மூது முகம்மது அலியார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்த குடிசை ஒன்றில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த குடிசையின் சொந்தக்காரன், தனது குடிசையை பார்க்கச் சென்ற போதே, சடலம் ஒன்று கிடப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்த குடிசைக்கு அண்மித்த பகுதியிலேயே இவர் வாழும் சிறிய குடிசையும் அமைந்துள்ளது.
இது குறித்து அவரது மனைவி மனாப் மன்சூரா கருத்து தெரிவிக்கும் போது,அவரிடமிருந்த குடிப்பழக்கம் காரணமாக, அவரை விட்டு நாங்கள் நான்கு மாதமாக பிரிந்து வாழ்கிறோம். வெள்ளம் காரணமாக எனது குடிசையில் வாழ முடியாத நிலை ஏற்பட்டதனால், எனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, உப்பாறு பகுதியில் உள்ள எனது தாயின் வீட்டுக்கு சென்று விட்டேன்.
இந்நிலையிலே, அவர் மரணமான செய்தியை கேள்விப்பட்டு, பிள்ளைகளோடு எனது வீட்டுக்கு வந்திருக்கிறேன். அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாது என தெரிவித்தார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர்.
 
        



 
                         
                            
