மோடிக்குப் போலி மிரட்டல்; மும்பை போக்குவரத்துக் காவல்துறைக்குக் வந்த குறுந்தகவல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக மும்பை போக்குவரத்துக் காவல்துறைக்குக் குறுந்தகவல் கிடைத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து மும்பையின் வொர்லி பகுதி காவல்துறையினர், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகருக்குச் சென்று சந்தேக நபரைக் கைது செய்தனர். அந்நபர், மதுபோதையுடன் வேலைக்குச் சென்றதால் பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 வயது மிர்ஸா முகம்மது பெய்க் எனும் சந்தேக நபர் விசாரணைக்காக மும்பைக்குக் கொண்டு வரப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவர், குஜராத்தின் பலன்பூர் நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
மதுபோதையில் வேலைக்குச் சென்றதால் பணிநீக்கம் செய்யப்பட்ட கோபத்தில் இருந்த அவர், மோடியைக் கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகக் குறுந்தகவல் அனுப்பினார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டன.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை (டிசம்பர் 7) அதிகாலை இரண்டு மணிக்குப் போக்குவரத்துக் காவல்துறையினர் வாட்ஸ்அப்பில் குறுந்தகவலைப் பெற்றனர். வெடிகுண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படப் போவதாகவும் திரு மோடியைத் தாக்குவதற்கான ஆயுதங்கள் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அந்தக் குறுந்தகவலில் கூறப்பட்டிருந்தது.
அந்நடவடிக்கைகளுடன் பாகிஸ்தான் உளவுத்துறைக்குத் தொடர்பிருப்பதாகவும் குறுந்தகவலில் கூறப்பட்டிருந்தது.