லண்டனில் தெரு விளக்கு கேமராக்களில் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது
தெற்கு லண்டனின் குரோய்டன் (Croydon) பகுதியில் நடத்தப்பட்ட நேரடி முக அங்கீகார தொழில்நுட்ப (LFR) சோதனை, கொள்ளை போன்ற குற்றங்களை குறைக்க உதவியுள்ளதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை மூலம் இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஒக்டோபரில் தொடங்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டத்தில், மொபைல் வேன்களுக்குப் பதிலாக தெரு விளக்கு கம்பங்களில் நிலையான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவை பொதுமக்களின் முகங்களை கண்காணிப்பு பட்டியலில் உள்ள குற்றவாளிகளின் முகங்களுடன் ஒப்பிடுகின்றன.
கைதானவர்களில் மூன்றில் ஒரு பங்கானோர் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த தொழில்நுட்பம் தனியுரிமையை பாதிப்பதாகவும், தவறான அடையாள ஆபத்து இருப்பதாகவும் சிவில் உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கடந்த ஆண்டு லண்டன் பாலம் அருகே ஒருவர் தவறாக அடையாளம் காணப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்த தொழில்நுட்பத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
முக அங்கீகார தொழில்நுட்பம் சட்டபூர்வமானதும், குற்றங்களை கட்டுப்படுத்த உதவும் முக்கிய கருவியுமாக இருப்பதாக பெருநகர பொலிஸார் வலியுறுத்தியுள்ளது.
இருப்பினும், தற்போது இந்த பைலட் திட்டத்தை லண்டனின் பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்தும் திட்டம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





