Facebook, Instagram நடைமுறையில் மாற்றம் – கடும் கோபத்தில் ஜோ பைடன்
Facebook, Instagram செயலிகளில் தகவல்களைச் சரிபார்க்கும் அம்சம் கைவிடப்பட்டது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த நடவடிக்கை மிக அவமானத்துக்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Meta நிறுவனம் அந்த முடிவை ஏனைய நாடுகளுக்கும் விரிவுபடுத்தினால் உலகளவில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக இருக்கும் டிரம்ப்பைச் சமாதானப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முடிவாக அது பரவலாகக் காணப்படுகிறது.
சமூக ஊடகத் தளங்களில் தகவல்களைச் சரிபார்க்கும் போக்கு, பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்குச் சமம் என்று டிரம்ப் ஏற்கனவே கூறியிருக்கிறார்.
உண்மையைச் சொல்வது முக்கியமானது என்று பைடன் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா நம்பும் அனைத்திற்கும் எதிராக இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக அவர் கூறினார்.
இந்நிலையில் Meta நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிரம்ப்பை Mar-a-Lagoவில் சந்தித்திருப்பதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது.
ஆனால் அது குறித்து இருதரப்பினரும் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. Meta நிறுவனம் அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவம் வாய்ந்த, பன்முகத்தன்மை கொண்ட திட்டங்களையும் கைவிடுவதாகத் தெரிவித்திருக்கிறது.