அமெரிக்காவை உலுக்கும் அதிக வெப்பம் – மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை
அமெரிக்காவை உலுக்கும் அதிக வெப்பம் காரணமாக கணிசமானவர்களுக்கு தீக்காய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் அரிசோனா உட்பட்ட மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் இந்த ஆண்டில் அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று வாரங்களுக்கும் மேல் இங்கு வெப்பநிலை 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேலாகவே இருந்துவருகிறது.
மாநிலத்தின் தலைநகரான பீனிக்ஸில் 24ஆவது நாளாக தொடர்ந்து 43 பாகை செல்சியஸ் என்கிற அளவைத் தாண்டியே வெப்பத்தின் தாக்கம் நிலவுகிறது
தரை வெப்பநிலை கொதிநிலையை விரைவில் அதிகரிக்ககூடும் என்றும் கடும் வெயிலில் இருந்து காத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் வானிலை துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலோக கார் சீட் பெல்ட் போன்ற சூடான பொருட்களை சில நொடிகள் தொட்டாலோ சாலையின் மீது வெறும் காலால் நடந்தாலோ போதும், கடுமையான தீக்காயம் ஏற்படுகிறது.
கருப்பு நிற அஸ்பால்ட்டால் அமைக்கப்பட்ட சாலையில் இருப்பதைவிட, சிறிது நேரம் ஒரு காருக்குள் இருப்பது அதிக வெப்பத்தில் இருந்து காப்பாற்றும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அரிசோனாவில் கோடையில் இப்படியான சில உடல்நலச் சிக்கல்கள் கோடை காலத்தில் வருவது இயல்புதான். இந்த முறை கொஞ்சம் இல்லை மிக அதிகமாகவே இருக்கிறது என அர்த்தம் பொதிந்தபடி சொல்கிறார்கள், மருத்துவத் தன்னார்வலர்கள்.
இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அரிசோனா தீக்காய மையத்தின் மருத்துவர் கெவின் ஃபோஸ்டர், அங்குள்ள 45 படுக்கைகளும் நிரம்பிவிட்டன என்றும் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.