சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு சேவை நீட்டிப்பு
தற்போதைய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 06 மாதங்களுக்கு சேவை நீடிப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்துள்ளார்.
இதன்படி, இம்மாத நடுப்பகுதியில் ஓய்வுபெறவிருந்த சட்டமா அதிபர், இந்த வருட இறுதி வரை பதவியில் நீடிக்கக்கூடிய தகுதியைப் பெற்றுள்ளார்.
தற்போதைய பிரதம நீதியரசர் ஜெயந்த ஜயசூரியவும் ஓய்வு பெறவுள்ள நிலையில் அவரது சேவை நீடிப்பு மிகவும் சிறப்பான ஒன்றாக அமையும்.
தற்போதைய பிரதம நீதியரசர் பதவி நீடிப்பு கிடைக்காமல் ஓய்வு பெற்றால், சேவை நீடிப்பு பெற்ற சஞ்சய் ராஜரத்தினம் பிரதம நீதியரசராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதித்துறையில் மேற்கொள்ளவிருக்கும் நியமனங்கள் குறித்து அரசியல் களத்தில் பேசப்படுகிறது.
எனினும், சட்டமா அதிபருக்கு சேவை நீட்டிப்பு வழங்கப்படுமானால், அது சட்டப் பேரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும்.
அனேகமாக நாளை (03ம் திகதி) நாடாளுமன்ற கூடும் போது இந்த பிரேரணை முன்வைக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.