எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் : பிரித்தானிய நீதிமன்றத்தை நாட இலங்கை அரசு நடவடிக்கை!
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீ விபத்து மற்றும் மூழ்கியதால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் 29ஆம் திகதி பிரித்தானிய அட்மிரல்டி உயர்நீதிமன்றத்தில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கப்பலின் நிறுவனத்திடம் இருந்து பெறக்கூடிய இழப்பீட்டுத் தொகையை 19.5 மில்லியன் பவுண்ட்ஸ் ஸ்ரேலிங்காக நீதிமன்றம் முன்னர் மட்டுப்படுத்தியிருந்ததாக திணைக்களம் குறிப்பிடுகிறது.
அதன் மூலம் கப்பல் விபத்தால் ஏற்பட்ட சேதத்திற்கு போதிய இழப்பீடு தொகையை வசூலிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதேவேளை, கப்பல் நிறுவனத்திடம் இருந்து நட்டஈட்டை மீட்பதற்காக சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான விரிவான அறிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதன் பிறகு வழக்கின் சாட்சியங்கள் விசாரிக்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. முதல் சாட்சியாக துறைமுக மாஸ்டர் முன்னிலைப்படுத்தப்படுவார் என சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.