பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகில் வெடிப்பு சம்பவம் ; ஒருவர் பலி, 10 பேர் காயம்
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் அக்டோபர் 7ஆம் திகதியன்று வெடிப்பு ஏற்பட்டது.இதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார், பத்து பேர் காயமடைந்தனர்.இந்தத் தகவலை ஜியோ நியூஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டது.
வெடிப்பு தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை.அதுகுறித்து பாகிஸ்தானிய அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.காயமடைந்தோரில் வெளிநாட்டவர் ஒருவர் அடங்குவார்.
வெடிப்பு ஏற்பட்ட இடத்துக்கு அருகில் வெளிநாட்டினர் சிலர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.இந்த வெடிப்புக்குப் பொறுப்பேற்று பலூச் விடுதலை ராணுவம் செய்தியாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியாளர்கள் உட்பட சீன நாட்டவர்களைக் குறிவைத்து வெடிகுண்டுகள் அடங்கிய வாகனம் ஒன்றைப் பயன்படுத்தி இத்தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து கராச்சி காவல்துறை உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.
பலூச்சிஸ்தான் மாநிலம் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து தனிநாடாக வேண்டும் எனப் பலூச் விடுதலை ராணுவம் போராடி வருகிறது.பலூச்சிஸ்தான் பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது.ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளுடன் அது எல்லையைக் கொண்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், பலூச்சிஸ்தானில் அந்த அமைப்பு தாக்குதல் நடத்தியது.தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பலூச்சிஸ்தானைச் சுரண்ட பாகிஸ்தானுக்குச் சீனா உதவி வருவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.அப்பகுதியில் பணிபுரியும் சீன நாட்டவர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி கொன்றுள்ளது.கராச்சியில் உள்ள சீனத் தூதரகம் மீதும் அந்த அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளது.