இந்தியாவில் ராணுவ தளவாடத் தொழிற்சாலையில் வெடி விபத்து – 8 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள இந்திய ராணுவத் தளவாடத் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) காலை நிகழ்ந்த வெடிப்பில் எட்டுப் பேர் உயிரிழந்தனர்.இவ்விபத்தில் மேலும் எழுவர் காயமடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
பண்டாராவில் அமைந்துள்ள அத்தொழிற்சாலையில் காலை 10 மணியளவில் வெடிப்பு நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.அதன் காரணமாக கட்டடத்தின் கூரை பெயர்ந்து விழுந்ததாகவும் உள்ளே 14 பேர் சிக்கிக்கொண்டதாகவும் கூறப்பட்டது. அவர்களில் இருவர் மீட்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“வெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வண்டிகளும் அவசர மருத்துவ வாகனங்களும் அனுப்பிவைக்கப்பட்டன. மீட்புப் பணி தொடர்கிறது. பெயர்ந்து விழுந்த கூரை ஜேசிபி இயந்திரத்தின் துணையுடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது,” என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறினர்.
வெடிப்புச் சத்தம் ஐந்து கிலோமீட்டர் தொலைவுவரை உணரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆலையிலிருந்து கரும்புகை வெளியேறுவதைத் தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு காணொளி காட்டியது.
இதனிடையே, ராணுவத் தளவாட ஆலையில் நேர்ந்த வெடிப்புச் சம்பவம் வருத்தமளிப்பதாகவும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிக்கொள்வதாகவும், காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வதாகவும் இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,X ஊடகம் வழியாகத் தெரிவித்துள்ளார்.
வெடிப்பிற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.