ஈரான் துறைமுகத்தில் நடந்த வெடி விபத்து – 115 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

தெற்கு ஈரானில் இன்று அதிகாலை பந்தர் அப்பாஸ் நகரில் மிகப் பெரிய வெடிப்பு பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் நில அதிர்வை உணர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வெடிப்பை தொடர்ந்து வானத்தில் மிகப் பெரிய மேக மூட்டம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பு குறித்து உள்ளூர் நெருக்கடி மேலாண்மை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் சில நிமிடங்களுக்கு முன்பு ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஒரு வலுவான வெடிப்பு ஏற்பட்டது, ஆனால் அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதுவரை, 115 பேர் பயங்கர குண்டுவெடிப்பைத் தொடர்ந்து காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதினைந்து ஆம்புலன்ஸ்கள், நான்கு ஆம்புலன்ஸ் பேருந்துகள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகத்திற்குள் உள்ள ஒரு நிர்வாக கட்டிடத்தில் வெடிப்பு நடந்ததாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள சினா கொள்கலன் யார்டில் வெடிப்பு நடந்ததாக ஈரானின் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.