இந்தியா செய்தி

இந்தியாவில் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு – 11,718 கோடி ரூபா ஒதுக்கீடு.

இந்தியாவில் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அமைச்சரவை 11,718 கோடி ரூபா நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (12) கூடியது.

இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

‘‘மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ஐ நடத்த மத்திய அமைச்சரவை 11,718 கோடி ரூபா ஒதுக்கியுள்ளது.

முன் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை டிஜிட்டல் வடிவில் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பிரத்யேக தொலைபேசி செயலி
மூலம் விபரங்கள் பதிவு செய்யப்படும்.

இதில் உள்ள தரவுகள் மத்திய போர்ட்டல் மூலம் கண்காணிக்கப்படும். தரவுகள் கசியாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், டேட்டா பாதுகாப்பு கொண்டதாக இந்த டிஜிட்டல் நடைமுறை திட்டமிடப்பட்டுள்ளது.” என அவர் கூறியுள்ளார்.

இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பமாகி
2026 செப்டம்பர் மாதத்தில் நிறைவடையும் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த முதல் கட்டத்தில் வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு வசதிகள் குறித்து கணக்கெடுக்கப்படும். இந்த கணக்கெடுப்பு அந்தந்த மாநில / யூனியன் பிரதேசங்களின் வசதிக்கு ஏற்ப 30 நாட்களுக்குள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பெப்ரவரி 2027 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும். இதில் மக்கள் தொகை குறித்து கணக்கெடுக்கப்படும். சாதி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும். அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு பயனர்களிடம் இருந்து வரும் உள்ளீடுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வினாத்தாள் இறுதி செய்யப்படும். இந்த கணக்கெடுப்பு நாடு முழுவதும் ஒவ்வொரு வீடாகச் சென்று மேற்கொள்ளப்படும்.

நாட்டின் 16 ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவாகும். சுதந்திரத்துக்குப் பிறகு நடத்தப்படும் 8 ஆவது கணக்கெடுப்பு இதுவாகும். உலகின் மிகப் பெரிய இந்த கணக்கெடுப்பு பணியில் 30 இலட்சம் களப்பணியாளர்கள் ஈடுபட உள்ளார்கள்.

வசிக்கும் வீட்டின் நிலை, வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள், சொத்துக்கள், சாதி, மதம், மொழி, கல்வி அறிவு, பொருளாதார செயற்பாடு, இடப்பெயர்வு உள்ளிட்ட தரவுகள் சேகரிக்கப்படும்.

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2021 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
கொரோனா தொற்று உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப் போனமை குறிப்பிடத்தக்கது.

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!