ஆஸ்திரேலியாவில் மரம் ஏறும் முதலைகளின் முட்டை ஓடுகள் மீட்பு – ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்
ஆஸ்திரேலியாவில் இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகப் பழமையான முதலைகளுக்குச் சொந்தமான முட்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை மரம் ஏறும் வகையைச் சேர்ந்த முதலை இனங்களுக்குச் சொந்தமானவையாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
ஒரு பண்ணை விவசாயியின் கொல்லைப் புறத்திலிருந்து இந்த முட்டை ஓடுகள் மீட்கப்பட்டன.
கண்டுபிடிக்கப்பட்ட முட்டை ஓடுகள் 55 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டவை எனக் கருதப்படுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பு பற்றிய தகவல்கள் “Journal of Vertebrate Paleontology” என்ற சஞ்சிகையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்டுபிடிப்பு ஆஸ்திரேலியாவில் உள்ள முதலைகளின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வதில் பெரும் பங்காற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கண்டத்தில் முதலைகளின் ஆரம்பக்கால வரலாறு பற்றி குறைவாகவே அறியப்பட்டது.
இந்த நிலையில், 55 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய இந்த முட்டை ஓடுகள், அவற்றின் வாழ்க்கை முறை மற்றும் அவை வாழ்ந்த சூழல் பற்றிய புதிய தகவல்களை வெளிப்படுத்தும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த முட்டை ஓடுகளின் அமைப்பு, இந்த முதலைகள் தற்போதைய முதலைகளைப் போல் தரையில் அல்லாமல், மரம் ஏறும் பழக்கத்தைக் கொண்டிருந்திருக்கலாம் என்ற கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.






