அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி இலங்கை மக்களிடம் கோரிக்கை
இலங்கையில் சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான சுதந்திரத்தினை முழுமையாக வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் நாட்டின் அனைத்து இனத்தவர்களும் இணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு – சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை இடம்பெற்ற நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை பாதுகாத்து வளமானதாக மாற்றுவதற்கான பொறுப்பு உணவு உற்பத்தி செய்யும் விவசாயி முதல் நாட்டை காக்கும் முப்படையினர் வரை அனைவருக்கும் உள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் சகல தொழிற்துறையினரும் இதில் பங்குதாரர்களாக உள்ளனர்.
நாட்டை பொருளாதார ரீதியில் சுதந்திரமானதாக மாற்றுவதற்கு இந்த நாட்டின் சகல பிரஜைகளும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.