தரமற்ற மருந்து தொடர்பில் பல முறை முறைப்பாடு செய்யப்பட்டபோதும் கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்!

வைத்தியசாலையில், தற்போது மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வைத்தியர்கள் கிடைக்கப்பெற்ற மருந்துகளை உபயோகிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளதகாவும், NPP அரசியல் சபை உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், இந்த சூழ்நிலைகளை பயன்படுத்திக்கொண்டு அமைச்சரும் அமைச்சு அதிகாரிகளும் தரம் குறைந்த மருந்துகளை கொள்முதல் செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
‘ப்ரோபோஃபோல்’ என்ற மருந்தைப் பயன்படுத்தியதால் சில மரணங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறிய அவர், இந்த மருந்து சிக்கலுக்கு வழிவகுத்ததாக பல மருத்துவமனைகள் புகார் செய்த போதிலும் அதனை பயன்பாட்டில் இருந்து மீள பெற நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“மே 15 அன்று ஹோமாகம மருத்துவமனை புரோபோஃபோல் பற்றி அறிக்கை செய்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தெல்தெனிய மற்றும் மாத்தறை மருத்துவமனைகளும் மே மாத நடுப்பகுதியில் இந்த மருந்தின் சிக்கல்கள் குறித்து அறிவித்தன.
இந்த மருந்தின் சிக்கல்கள் குறித்து பேராதனை வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் முறைப்பாடு செய்திருந்தார். கொழும்பில் உள்ள கண் மருத்துவமனையில் மரணம் ஏற்படும் வரை பல முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் இந்த விடயம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கை இழந்து சிகிச்சை பெறுவதிலும், அறுவை சிகிச்சை செய்வதிலும் மக்கள் குழப்பத்தில் உள்ளனர் எனவும், இந்த அனைத்து சம்பவங்கள் குறித்தும் உரிய விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.