புட்டினை தடுக்க வேண்டுமானால் ஐரோப்பிய நாடுகள் இராணுவ திறனை மேம்படுத்த வேண்டும்!!
இங்கிலாந்து மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தடுக்க அல்லது கையாள தங்கள் இராணுவத் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் முன்னாள் இராணுவத் தலைவர் சர் ஜாக் ஸ்டிரப் (Sir Jock Stirrup) வெளியிட்டுள்ள கொள்கை மாற்றத்திற்கான அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை இங்கிலாந்தின் “காலாவதியான அணுசக்தி கோட்பாட்டை” விமர்சிக்கிறது. அத்துடன் அணுசக்தி கூறுகளுடன் பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகளையும் பரிந்துரைத்துள்ளது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer), போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால் உக்ரைனில் துருப்புக்களை நிறுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதற்கு குறைந்தது 50,000 துருப்புக்கள் தேவைப்படும் என்று இராணுவ புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்நிலையில் தற்போது பிரித்தானியாவின் வசம் போதுமான படைபலம் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேநேரம் மேற்கத்திய சக்திகள் உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கத் தவறிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தலைவர்கள் அர்த்தமுள்ள வகையில் தடுப்பைப் பயன்படுத்தவில்லை என்றும், அணுசக்தித் தடுப்புக்கான பிரிட்டனின் அறிவுசார் திறனில் சரிவு இருப்பதையும் குறித்த அறிக்கை எடுத்துரைத்துள்ளது.
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஐரோப்பியத் தலைவர்கள் பாதுகாப்புச் செலவினங்களையும் அமெரிக்காவை நம்பியிருப்பதையும் மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.





