அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை இடைநிறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம் – டொலரும் வீழ்ச்சி!
ஜூலை மாதம் ஒப்புக் கொள்ளப்பட்ட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் ஒப்புதலை ஐரோப்பிய நாடாளுமன்றம் இடைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் (Strasbourg) அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிக்கும் ட்ரம்பின் நடவடிக்கையின் காரணமாக மேற்படி ஒப்பந்தம் இடைநிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இது அமெரிக்காவிற்கும் – ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான மற்றுமொரு பதற்றத்தை குறிக்கிறது. அத்துடன் ஐரோப்பிய சந்தைகள் சரிவடையவும் வழியமைத்துள்ளது.
ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ளன. நாணயச் சந்தைகளில், அமெரிக்க டொலரும் கடுமையாக சரிந்தது.
டொலருக்கு எதிராக யூரோ 0.8% க்கும் அதிகமாக உயர்ந்து $1.1749 ஆக பதிவாகியது. பின்னர் மீண்டும் சரிந்தது. அதே நேரத்தில் பவுண்டும் நாள் முடிவதற்கு முன்பு 0.1% உயர்ந்து $1.343 ஆக உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.





