முடக்கி வைத்துள்ள ரஷ்ய சொத்துகளை உக்ரைனுக்குப் பயன்டுத்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்
உக்ரைனைத் தற்காக்க ஏற்கெனவே முடக்கி வைக்கப்பட்டு உள்ள ரஷ்ய சொத்துகளைப் பயன்படுத்தும் திட்டம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வரைந்து உள்ளன.
ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துகள் ஐரோப்பிய ஒன்றியத்தால் முடக்கப்பட்டு உள்ளன. அந்தச் சொத்துகளின் மூலம் கிடைக்கக்கூடிய லாபத்தை, போரிட்டு வரும் உக்ரைனுக்குப் பயன்படுத்துவது அந்தத் திட்டம் என்று பல்கேரிய அரசாங்கம் புதன்கிழமை (22) கூறியது.
அதற்கான உடன்பாடு மே மாதத் தொடக்கத்தில் ஐரேப்பிய ஒன்றிய தூதர்களிடையே எட்டப்பட்டுவிட்டது. அதற்கு அமைச்சர்களின் உத்தரவு மட்டுமே தேவைப்படுகிறது.இருப்பினும் அந்தத் திட்டத்தை ரஷ்யாவின் மூத்த பேராளர் ஒருவர் எதிர்த்து உள்ளார்.“ரஷ்ய சொத்துகளில் இருந்து கிடைக்கும் லாபத்தைப் பயன்படுத்தும் திட்டம் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கணிக்க இயலாது.“ஆயினும், ரஷ்யாவிடம் இருந்த திருடப்பட்ட சொத்துகளை என்றாவது ஒருநாள் ஐரோப்பிய ஒன்றியம் திருப்பித் தந்துதான் ஆக வேண்டும்,” என்றார் அவர்.
உடன்பாட்டின்படி, ரஷ்ய சொத்துகளின் லாபத்தில் 90 சதவீதம் உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தால் நடத்தப்படும் நிதியத்திற்குப் போய்ச் சேரும். எஞ்சிய 10 சநவீதம் உக்ரைனுக்குத் தேவைப்படும் இதர உதவிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
ரஷ்ய சொத்துகளில் இருந்து கிடைக்கும் லாபம் 2027ஆம் ஆண்டு வரை 15 முதல் 20 பில்லியன் யூரோ (S$22 பில்லியன் முதல் S$29 பில்லியன்) இருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கருதுகிறது.அந்தத் தொகையின் முதல் பகுதியை வரும் ஜூலை மாதம் உக்ரைன் பெறக்கூடும் என்று ஒன்றியத்தின் பேராளர்கள் கூறினர்.
இதற்கிடையே, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான பாவனைப் பயிற்சியை ரஷ்யா தொடங்கி உள்ளதாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு தெரிவித்து உள்ளது.முதற்கட்ட பாவனைப் பயிற்சியை நடத்த அதிபர் விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டதாக அது குறிப்பிட்டது.
இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் தலையிடாதவாறு ஒதுங்கி இருக்க மேற்கத்திய நாடுகளை ரஷ்யா எச்சரிப்பதன் அறிகுறியே அணுவாயுத பாவனைப் பயிற்சி என்று அணுவாயுத பகுப்பாய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்குவதோடு உளவுச் சேவைகளையும் அளித்து வருகின்றன. இருப்பினும், ராணுவ வீரர்களை அவை இதுவரை உக்ரைனுக்கு அனுப்பவில்லை.