ஈழத்து பின்னணியுடன் அதிரும் ‘எதிர்நீச்சல்’ களம்!
சன் டிவியின் ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ மெகாத் தொடரில், கலெக்டர் மதிவதினியின் கடந்த கால வாழ்க்கை குறித்த அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் பிரபல மெகாத் தொடரான ‘எதிர்நீச்சல்’ தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, கலெக்டர் மதிவதினியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளமை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனனியிடம் தனது கடந்த காலத்தை பகிர்ந்துகொண்ட மதிவதினி, தான் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்ற உண்மையை உடைத்துள்ளார். ஈழப் போராட்ட சூழலில் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து அநாதையாக நின்ற தன்னை, ஒரு தமிழக தந்தை தத்தெடுத்து வளர்த்ததாக உருக்கமாகத் தெரிவித்தார்.
தனது வளர்ப்புத் தந்தை தன்னை ஒரு கலெக்டராகப் பார்க்க வேண்டும் என்ற இலட்சியத்திற்காக உழைத்தவர் என்றும், ஆனால் தான் கலெக்டர் ஆவதற்கு முன்னரே அவர் மறைந்துவிட்டதாகவும் கூறி கண்ணீர் மல்கினார்.
தவறான ஒரு நபரைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்ததால் தனது வாழ்க்கை திசைமாறிப் போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவையும் மீறி தனது மகளைப் பார்க்க வந்த முன்னாள் கணவரின் அடியாளை மதிவதினி கடுமையாக எச்சரித்து அனுப்பினார்.
“நீதிமன்றம் சொன்ன நாளில் மட்டுமே மகளைப் பார்க்க முடியும். அதற்கு மேல் அத்துமீறினால் உன் ஓனருக்கு (முன்னாள் கணவர்) பெரிய ஆபத்து காத்திருக்கிறது” என கலெக்டர் பாணியில் அதிரடி காட்டினார் மதிவதினி.
இந்த எபிசோடின் மிக முக்கியமான திருப்பமாக, மதிவதினி ஈழத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் தொடரின் முக்கிய வில்லனான ராணாவின் (Rana) மனைவியாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ராணாவின் கடந்த காலமும் இலங்கை பின்னணியுடன் தொடர்புடையதாகக் காட்டப்படுவதால், கதை இனி பெரும் போராட்டக் களமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், நில விவகாரத்தில் பிரியாணி கடைக்காரரை அனுப்பி தகராறு செய்த கும்பலை, சக்தி அடிக்கப் பாய்ந்தபோது ஜனனி தடுத்து நிறுத்தினார். இது தங்களை வம்புக்கு இழுக்கும் சதி என்பதைப் புரிந்துகொண்டு அமைதியாகக் கையாண்ட ஜனனியின் சாதுர்யம் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
மதிவதினியின் போராட்டமும், ஜனனியின் சவால்களும் இணைந்து ‘எதிர்நீச்சல்’ தொடரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன.





