காசாவில் பரவி வரும் தொற்றுநோய் : உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு!
காசா பகுதியில் அதிகரித்து வரும் தொற்று நோய்களின் அச்சுறுத்தல் குறித்து “மிகவும் கவலைப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
“காசாவின் தெற்கில் மக்கள் தொடர்ந்து பெருமளவில் இடம்பெயர்ந்து வருவதால், சில குடும்பங்கள் பல முறை இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதுடன், நெரிசலான சுகாதார வசதிகளில் தங்குமிடம் தொற்றுநோய் பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் “பயங்கரவாத” குழுவாக கருதப்படும் ஹமாஸை அழிக்க இஸ்ரேல் சபதம் செய்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி தொடங்கிய போரால் ஏறக்குறைய 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், போருக்கு மத்தியில் அக்டோபர் நடுப்பகுதியிலிருந்து டிசம்பர் நடுப்பகுதி வரை, தங்குமிடங்களில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
180,000 பேர் மேல் சுவாச நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 136,400 வயிற்றுப்போக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 55,400 பேர் பேன் மற்றும் சிரங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 5,330 சிக்கன் பாக்ஸ் வழக்குகள், மற்றும் 42,700 தோல் வெடிப்பு வழக்குகள், 4722 இம்பெடிகோ வழக்குகள் உட்பட பல நோய் தொற்றுக்கள் பரவி வருவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.