உளவுத்துறை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து பாதுகாப்பை பலப்படுத்தும் இங்கிலாந்து!
வளர்ந்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக இங்கிலாந்தின் பாதுகாப்பை வலுப்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் அதன் உளவுத்துறை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருவதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாற்றம், ரோயல் கடற்படை, பிரித்தானிய இராணுவம், ரோயல் விமானப்படை, இங்கிலாந்து விண்வெளி கட்டளை மற்றும் நிரந்தர கூட்டுத் தலைமையகத்தின் பிரிவுகளை ஒன்றிணைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நிலம், கடல், வான், விண்வெளி மற்றும் சைபர்ஸ்பேஸ் ஆகியவற்றிலிருந்து தகவல்களைச் சேகரிப்பதை விரைவுபடுத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2018 நோவிச்சோக் விஷவாயு (Novichok poisoning) விசாரணையில் இருந்து வெளிவந்த வெளிப்பாடுகளைத் தொடர்ந்து, இந்த மூலோபாய மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுவதனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது வெளிநாட்டு உளவுத்துறை சேவைகள் இப்போது “பாரம்பரிய உளவு விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவை” என்பதை எடுத்துக்காட்டுவதாக பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் விரோத நாடுகள் சைபர் நெட்வொர்க்குகள், செயற்கைக்கோள்கள் மற்றும் உலகளாவிய கப்பல் பாதைகள் மீதான தாக்குதல்களையும், தவறான தகவல்களின் பரவலையும் அதிகரித்து வருவதால் இந்த மாற்றம் அவசியப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, “அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் போது, நாங்கள் பாதுகாப்பு உளவுத்துறையை சிறந்ததாக்குகிறோம்.
“இந்த அரசாங்கம் மூலோபாய பாதுகாப்பு மதிப்பாய்வில் பரிந்துரைகளை வழங்கி, பிரிட்டனை இராணுவ கண்டுபிடிப்புகளில் முன்னணியில் வைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.




