உலகின் மிகப் பெரிய கப்பல் நிறுவனத்தில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!
உலகின் மிகப் பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்றான ‘ஃபார் ஷிப்பிங்’ இலங்கை பயிற்சி பெற்ற கடற்படையினருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க இணங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
‘ஃபார் ஷிப்பிங்’ நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் யு யோங் ஜுன் உட்பட குழுவொன்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நேற்று (02.09) சந்தித்து இது குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் பயிற்சி பெற்ற இளம் மாலுமிகள் பலருக்கு சீனாவில் அமைந்துள்ள தனது நிறுவனத்தில் தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
எனவே, ஆட்சேர்ப்பு முறைகள் தொடர்பாக இலங்கையின் கடற்படைத் துறையில் ஈடுபட்டுள்ள பங்குதாரர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடப்படும் எனவும், இலங்கையில் உள்ள கடற்படை பயிற்சி நிறுவனங்களில் பட்டம் பெற்ற இளைஞர்களை பணியிடத்தில் பயிற்சிக்காக வேலைக்கு அமர்த்தவும், பின்னர் நிரந்தர சேவைக்கு அமர்த்தவும் தனது நிறுவனம் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.