இலங்கையர்களுக்கு வெளிநாடு ஒன்றில் வேலைவாய்ப்பு!
இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் மேலும் 7,000 இலங்கையர்களுக்கு கொரியாவில் பணிபுரிய விசா வழங்கப்படும் என கொரிய குடியரசின் தூதுவர் மியோன் லீ தெரிவித்தார்.
கொரியாவில் 25,000 இலங்கை தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அது 32,000 ஆக அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த வாரம் அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்த புதிய கொரியத் தூதுவர், இலங்கையில் நடைபெற்று வரும் திட்டங்களை விரைவாக முடிப்பதுடன், இலங்கையில் சில புதிய அபிவிருத்தித் திட்டங்களிலும் தமது நாடு செயல்படும் என்று தெரிவித்தார்.
பருவகால விவசாயத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் இலங்கையர்களையும் ஆட்சேர்ப்பு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிரதமர் அவரிடம் வலியுறுத்தினார், மேலும் இந்த கோரிக்கையை தனது அரசாங்கம் பரிசீலிக்கும் என்று தூதுவர் உறுதியளித்தார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்பு பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்ட சில உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை மீண்டும் தொடங்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் அவரிடம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.