விக்டோரியாவில் கோரத் தாண்டவமாடும் காட்டுத்தீ: ‘உடனடியாக வெளியேறுங்கள்’ என மக்களுக்கு அவசர எச்சரிக்கை
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள அப்பர் முர்ரே (Upper Murray) பகுதியில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், அங்குள்ள மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மவுண்ட் லாசன் (Mt Lawson) தேசியப் பூங்கா அருகே சுமார் 1,200 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இந்தத் தீ, தற்போது அதிவேகமாக குடியிருப்புப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது.
குறிப்பாக பங்கில், கிரானியா மற்றும் தோலோகோலாங் பகுதி மக்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ‘விக் எமர்ஜென்சி’ (VicEmergency) வலியுறுத்தியுள்ளது.
தீயின் தீவிரம் அதிகரித்து வருவதால், வெளியேற மறுப்பவர்களுக்கு அவசர உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வால்வா பகுதியில் ஒரு கேரவன் தீக்கிரையாகியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை ஏற்படவுள்ள வானிலை மாற்றங்கள் தீயை மேலும் விசிறிவிடக்கூடும் என்பதால் தீயணைப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.





