“ உடன் வெளியேறுக” ஈரானிலுள்ள இந்தியர்களுக்கு முன்னெச்சரிக்கை விடுப்பு!
ஈரானில் வன்முறை தலைவிரித்தாடும் நிலையில், அங்கிருந்து உடன் வெளியேறுமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரானிலுள்ள இந்திய தூதரகத்தால் இது தொடர்பில் விசேட அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய ஈரானில் வசிக்கும் இந்தியர்கள், கிடைக்கக் கூடிய போக்குவரத்தைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளது.
ஈரானில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் வணிக விமானங்கள் உட்பட கிடைக்கக் கூடிய போக்குவரத்து வழிகள் மூலம் நாட்டைவிட்டு வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளனர்.
ஈரானில் மாறிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறு இந்தியர்களை தூதரகம் கேட்டுக்கொள்கிறது.
தங்கள் கடவுச்சீட்டு, அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் எனவும் நினைவூட்டப்பட்டுள்ளது.
ஈரானில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டங்களால் அங்கு அசாதாரண நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் ஈரான் செல்வதற்கு பல நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன. அங்குள்ள தமது நாட்டு பிரஜைகளையும் உடன் வெளியேறுமாறும் அறிவுறுத்தியுள்ளன.





