வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை ரத்து செய்ய எலான் மஸ்க்,விவேக் ராமசுவாமி திட்டம்
அமெரிக்காவின் மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை முடிவுக்குக் கொண்டுவர எலான் மஸ்க், விவேக் ராமசுவாமி ஆகிய இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
அரசாங்கச் செலவினங்களை மறுஆய்வு செய்யும் புதிய பணிக்குழுவுக்கு இந்த இருவரையும் அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை ரத்து செய்ய மஸ்க், விவேக் மேற்கொள்ளும் முயற்சியின் காரணமாக புதிய அரசாங்கத்துக்கும் அரசாங்க ஊழியர் சங்கங்களுக்கும் இடையே மோதல் ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
“மத்திய அரசு ஊழியர்கள் வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலையிடத்துக்குச் சென்று பணிபுரிய வேண்டும் என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்தும்போது சிலர் தாமாகவே முன்வந்து பதவி விலகுவர். இதை நாங்கள் வரவேற்கிறோம். வீட்டிலிருந்து வேலை செய்யும் சலுகை கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது நடப்புக்கு வந்தது. தற்போது வேலையிடத்துக்கு வந்து வேலை செய்ய விரும்பாதோருக்கு மக்கள் செலுத்தும் வரியைப் பயன்படுத்தி சம்பளம் கொடுப்பது முறையல்ல,” என்று மஸ்க்கும் விவேக்கும் கூறினர்.