அமெரிக்க அரச ஊழியர்கள் பணி நீக்கம் – மிரட்டல் விடுத்த எலோன் மஸ்க்

அமெரிக்காவின் அரசாங்க ஊழியர்கள் தாங்கள் செய்த வேலையை விவரிக்க தவறினால் வேலையிலிருந்து பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எலோன் மஸ்க் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் அரசாங்க செயல்திறன் துறையை அவர் வழிநடத்துகிறார். X சமூக ஊடகத் தளத்தில் அவ்வாறு பதிவு செய்யப்பட்டது.
மத்திய அரசாங்க ஊழியரணியைச் சீரமைக்கவும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தம்முடைய சமூக ஊடக தளமான Truth Socialஇல் பதிவிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து மஸ்கின் மிரட்டல் வந்துள்ளது. மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு “கடந்த வாரம் நீங்கள் என்ன செய்தீர்கள்” எனும் தலைப்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அவர்கள் அதற்குப் பதிலளித்தாகவேண்டும். தவறினால் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.
எந்தச் சட்ட அடிப்படையில் அரசாங்க ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என்பது இன்னும் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.