எக்ஸ் நேரலையில் பங்கேற்க கமலா ஹாரிஸுக்கு விடுத்துள்ள அழைப்பு எலான் மஸ்க்
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பை இந்திய நேரப்படி இன்று காலை நேர்காணல் செய்திருந்தார் எக்ஸ் தள உரிமையாளர் மஸ்க். இந்நிலையில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வில் முன்னிலையில் உள்ள கமலா ஹாரிஸும் எக்ஸ் தள நேரலையில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
எக்ஸ் தளத்தின் ஸ்பேஸஸில் கமலா ஹாரிஸையும் ஹோஸ்ட் செய்வதில் எனக்கு மகிழ்ச்சிதான் என மஸ்க் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். இது குறித்து கமலா ஹாரிஸ் முடிவு செய்ய வேண்டி உள்ளது. கடந்த சில வாரங்களில் அவர் எந்தவிதமான நேர்காணலிலும் பங்கேற்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் – மஸ்க் ஸ்பேஸஸ் உரையாடலை நிகழ்நேரத்தில் மட்டும் சுமார் 1.6 கோடி பயனர்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸை ட்ரம்ப் சாடி இருந்தார். அதோடு பல்வேறு உலக விவகாரங்களை அவர் பேசி இருந்தார்.
“ட்ரம்ப்பின் முழு பிரச்சாரமும் எலான் மஸ்க் மற்றும் தன்னைப் போன்ற செல்வந்தர்களுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர்களால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு எந்த பயனும் இல்லை. மீண்டும் ட்ரம்ப்பை அதிபராக்கும் வகையில் மில்லியன் கணக்கான டாலர்களை நன்கொடையாக மஸ்க் வழங்குகிறார். அதோடு ட்ரம்ப்பின் வெறுப்பு பேச்சை பரப்ப, தான் வாங்கிய தளத்தை பயன்படுத்தி, அதனை பல கோடி மக்களிடம் அவர் கொண்டு செல்ல முயல்கிறார்” என கமலா ஹாரிஸ் பிரச்சார குழுவின் தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
எக்ஸ் தளத்தில் ஸ்கிரிப்ட் செய்யப்படாத நேர்காணல் நிகழ்வில் பங்கேற்று பேசும் திறன் கமலா ஹாரிஸ் வசம் இல்லை என குடியரசு கட்சி ஆதரவாளர்கள் ட்வீட் செய்து வருகின்றனர். ஜனநாயக கட்சியினர் அதற்கு எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.