அமெரிக்க அரச தகவல்களை கையாளும் எலான் மஸ்க் – எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை

அமெரிக்காவின் மிக முக்கிய அரசுத் தகவல்களை எலான் மஸ்க் மற்றும் அவரது அரசு செயல்திறன் துறை கையாள்வதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 14 மாகாணங்களைச் சேர்ந்த அரச வழக்குரைஞர்களால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வொஷிங்டன் டி.சி.யில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, அமெரிக்க அரசின் செயல்திறன் துறையின் தலைமையில் எலான் மஸ்க் எடுக்கும் நடவடிக்கைகள் ஒரு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் செனட் அவையால் உறுதிசெய்யப்பட்ட அதிகாரியால் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
இது காங்கிரஸ் அவை மற்றும் அதிபருக்கான அதிகாரங்களை வரையறுக்கும் அரசியலமைப்பு விதிகளின்படி வலியுறுத்தப்படுகிறது.
அமெரிக்க செயல்திறன் துறைக்கு வெளியே நிர்வாகப் பிரிவின் கீழ், எலான் மஸ்க், யார் ஒருவருக்கும் உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தடை விதிக்க வேண்டும், அவரது நடவடிக்கைகள் எதற்கும் சட்டப்பூர்வ தாக்கம் இல்லை என்றும் உத்தரவிடுமாறு அரசு வழக்குரைஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் மிக முக்கிய தகவல்களை, சட்டப்பூர்வ அனுமதியற்ற அமைப்புகள் மூலம் கையாள்வது மற்றும் அதிகாரப்பூர்வம் இல்லாதவர்கள் மூலம் கையாள்வதையோ எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க செயல்திறன் துறை மேற்கொள்ளாத வகையில் தடை உத்தரவுப் பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் பிறப்பிக்கும் உத்தரவுகள், நடவடிக்கைகள் மதிப்பற்றவை என்று அறிவிக்கவும், உத்தரவுகள் பிறப்பிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மிக்ஸிகன் அரசு பொது வழக்குரைஞர் டானா நெஸ்ஸல் தெரிவித்துள்ளார்.