டிரம்பின் பிரச்சார குழுவுக்கு எலன் மஸ்க் $74 மில்லியன் நன்கொடை
அதிபர் தேர்தலில் போட்டியிடும் டோனல்ட் டிரம்ப்பை உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் தீவிரமாக ஆதரித்து வருகிறார்.அதோடு நின்றுவிடாமல் டிரம்பின் பிரசாரக் குழுவுக்கு எலன் மஸ்க் 75 மில்லியன் டொலர் நன்கொடை வழங்கியிருக்கிறார்
இதன் மூலம் குடியரசுக் கட்சியின் ஆகப்பெரிய நன்கொடையாளராக எலன் மஸ்க் ஆகியுள்ளார்.
வரும் நவம்பர் 5ஆம் திகதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெறுவதற்கு எலன் மஸ்க் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் வலுவான போட்டியைக் கொண்ட மாநிலங்களில் வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக மட்டும் ஜுலை முதல் செப்டம்பர் வரையில் 72 மில்லியன் அமெரிக்க டொலர் பிரசாரத்துக்கு செலவழிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் கூறியது.இதில், வாக்காளர்களை ஈர்ப்பதற்கு வெளிக் குழுக்களை டிரம்ப் பிரசாரக் குழு நம்பியிருக்கிறது.
அந்த வகையில் டிரம்புக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிசுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க எலன் மஸ்க் முக்கியப் பங்கை ஆற்றி வருகிறார்.
டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மஸ்க், கடந்த முறை ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்ததாகத் தெரிவித்தார்.ஆனால் இம்முறை அவர் குடியரசுக் கட்சியின் பக்கம் சாய்ந்துள்ளார்.
கடந்த ஜூலையில் அவர் டிரம்பை அங்கீகரித்தார். அக்டோபரில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் டிரம்புடன் பங்கேற்றார்.