பிரிக்ஸ் கூட்டமைப்பில் துருக்கிக்கு பங்காளித்துவ நாடு தகுதி – அமைச்சர் ஒமர் பொலாட்
பிரிக்ஸ் கூட்டமைப்பு, துருக்கிக்கு பங்காளித்துவ நாடு தகுதியை வழங்கியுள்ளதாக துருக்கி வர்த்தக அமைச்சர் ஒமர் பொலாட் கூறியுள்ளார்.
நேட்டோ உறுப்பு நாடான துருக்கி, அண்மைய மாதங்களாக பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர விருப்பம் காட்டி வந்தது.
அந்தக் கூட்டமைப்பில் உறுப்பு நாடாக சேர்வதில் துருக்கி முறைப்படி நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் ரஷ்யாவின் கஸான் நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஏற்று நடத்திய பிரிக்ஸ் மாநாட்டில் துருக்கி அதிபர் ரிசெப் தய்யிப் எர்துவான் பங்கேற்றார்.
உறுப்பு நாடுகளுடன் பொருளியல் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக பிரிக்ஸ் கூட்டமைப்பை துருக்கி கருதுவதாக எர்துவான் சொன்னார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் உத்தேச உறுப்பியம், மேற்கத்திய ராணுவக் கூட்டணிக்கு துருக்கியின் பொறுப்புகளைப் பாதிக்காது என அந்நாட்டு அதிகாரிகள் பலமுறை கூறி வந்துள்ளனர்.