எகிப்து – கெய்ரோ தொலைத்தொடர்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலி, இணையம், தொலைபேசி இணைப்பு துண்டிப்பு

எகிப்திய தலைநகர் கெய்ரோவில் உள்ள முக்கியமான தரவு சேமிப்பு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) தீ ஏற்பட்டது.
இதில் நால்வர் மரணமடைந்தனர், குறைந்தது 22 பேர் காயமடைந்ததாக எகிப்திய சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஹோசாம் அப்டல் காஃபார் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
எகிப்தின் தொலைத்தொடர்பு கட்டடத்தில் திங்கட்கிழமை ஏற்பட்ட அந்தத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதனால் தலைநகரம் முழுவதும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக எகிப்திய தொலைக்காட்சி நிறுவனம் கூறியது.
இது குறித்து அறிக்கை ஒன்றில் தெரிவித்த எகிப்திய தொடர்பு, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அமர் டலாட், 24 மணிநேரத்துக்குள் படிப்படியாக தொடர்புச் சேவை மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று விளக்கினார்.
மேலும் எகிப்திய தொலைபேசி சேவை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஊழியர் இறப்புக்கு அனுதாபம் தெரிவித்தது. அத்துடன், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கவும் உறுதியளித்தது.
தீயினால் தொலைபேசி அழைப்புகள், இணைய சேவை யாவும் துண்டிக்கப்பட்டன. இதில் நாடு முழுக்க தொடர்புச் சேவை வழக்கத்துக்கு மாறாக 62% செயல்பாட்டில் மட்டுமே இருந்ததாக இணைய மேற்பார்வை அமைப்பான ‘நெட்பிளாக்ஸ்’ தெரிவித்தது.