கல்வி மறுசீரமைப்பு சர்ச்சை: தீர்வுக்கு நிபுணர்கள் அடங்கிய பொறிமுறை!
” கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும் .” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துடன் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
தற்போதுள்ள சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி, தேசிய கல்வி நிறுவகத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பின் மூலம், கல்வி மறுசீரமைப்புகளை செயல்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்களை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் (FUTA) இங்கு எடுத்துக்காட்டினர்.
புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கான தேவையை தமது சங்கம் ஏற்றுக்கொள்வதாகவும், நகர்ப்புற பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளை விட கிராமப்புற பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளுக்கு புதிய கல்வி மறுசீரமைப்புகள் தேவைப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கல்விச் மறுசீரமைப்புகளில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எடுத்த முடிவைப் பாராட்டுவதாகவும், அதற்காக தமது ஆதரவுகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக, பல்கலைக்கழக கட்டமைப்பில் விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் உள்ளிட்ட பரிந்துரைகளும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டன.
பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் கல்வியைப் பாதுகாக்க அரசாங்கம் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பல்கலைக்கழக சட்டத்தின் திருத்தம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.





