சலுகையில்லையேல் பொருளாதார சிக்கல்கள் ஏற்படும் – வெனிசுலாவை எச்சரிக்கும் அமெரிக்கா!
வெனிசுலாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கப்பல்களில் உள்ள எண்ணெய்களை தனியான ஒரு இடத்தில் சேமித்து வைப்பதில் கவனம் செலுத்துமாறு வெள்ளை மாளிகை அமெரிக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro) மீது அழுத்தத்தை அதிகரிக்க இராணுவ வழிமுறைகளை விட பொருளாதார வழிகளைப் பயன்படுத்துவதில் ட்ரம்ப் நிர்வாகம் தற்போது அதிக ஆர்வம் காட்டுவதை இந்த நடவடிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இராணுவ அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் ட்ரம்ப் எதிர்பார்க்கும் இலக்கை அடைய பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு குறிப்பிடத்தக்க சலுகைகளை வழங்க ஒப்புக் கொள்ளாவிட்டால், ஜனவரி மாத இறுதியில் வெனிசுலா பெரும் பொருளாதார சிக்கலை எதிர்கொள்ளும் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
வெனிசுலா “முன்னர் எங்களிடமிருந்து திருடிய அனைத்து எண்ணெய், நிலம் மற்றும் பிற சொத்துக்களையும்” திருப்பித் தரும் வரை அமெரிக்க இராணுவம் இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளதாகவும் பெயர் குறிப்பிடாத வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் ரொய்டர்ஸ் செய்திசேவையிடம் தெரிவித்துள்ளார்.





