உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்ய உத்தரவு
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்திருந்த வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீர்கொழும்பு மாவட்ட நீதிபதி லலித் கன்னங்கர நிராகரித்துள்ளார்.
அத்துடன், அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்யுமாறும் நீதிபதி லலித் கன்னங்கர நேற்று முன்தினம் (11) உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்ட இந்த இழப்பீட்டு 182 வழக்குகள் தொடர்பாக, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமது தரப்பினர் இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர்களாக இருப்பதனால், பொலிஸ் கட்டளைச் சட்டத்துக்கமைவாக சம்பந்தப்பட்ட சம்பவம் இடம்பெற்று 03 மாதங்களுக்கு முன்னதாக அவர்களுக்கெதிராக வழக்கும் தாக்கல் செய்யப்படவேண்டுமென முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சட்டத்தரணிகள் முதற்கட்ட ஆட்சேபனையை சமர்ப்பித்ததோடு, குண்டுவெடிப்பு நடந்து மூன்று மாதங்களுக்குள் முறைப்பாட்டாளர்களான பாதிக்கப்பட்டவர்கள் உரிய வழக்கை தாக்கல் செய்யாததால், தங்கள் தரப்பினரான பொலிஸ் அதிகாரிகள் மீதான இழப்பீட்டு வழக்குகளை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்யவேண்டுமென அவர் தெரிவித்தார்.