தைவானை உலுக்கிய நிலநடுக்கம் ; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு
தைவானின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹுவாலியேன் நகரில் ஆகஸ்ட் 16ஆம் திகதியன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 6.3ஆக அது பதிவானது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம், காயங்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியிடப்படவில்லை.ஒரே நாளுக்குள் இரண்டாவது முறையாகத் தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாகத் தலைநகர் தைப்பேயிலும் அதிர்வுகள் ஏற்பட்டன.இதில் அங்குள்ள கட்டடங்கள் ஆட்டங்கண்டன.
இருப்பினும், நிலத்துக்கு அடியில் உள்ள ரயில் சேவைகள் தொடர்ந்ததாகவும் அவை குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
ஆகஸ்ட் 15ஆம் திகதியன்று தைவானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.அது ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவானது.
கடந்த ஏப்ரல் மாதம் ஹுவாலியேன் நகரைச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.அது கடந்த 25 ஆண்டுகளில் தைவான் கண்டிராத ஆக மோசமான நிலநடுக்கம்.
அதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.