துபாய் – ஆத்திரத்தில் 2 இந்தியர்களை வெட்டிக் கொலை செய்த பாகிஸ்தான் இளைஞன்

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள சோன் கிராமத்தைச் சேர்ந்தவர் அஷ்டபு பிரேம்சாகர் ( 35).இவரும், தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாஸ், சாகர் ஆகியோர் துபாயில் உள்ள மாடர்ன் பேக்கரி என்ற கடையில் வேலை பார்த்து வந்தனர். இந்த கடையில் பாகிஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவரும் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இந்தியர்களுக்கும், பாகிஸ்தான் வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கடும் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் வாலிபர் வாளால் 3 இந்தியர்களையும் சரமாரியாக வெட்டினார். இந்த தாக்குதலில் அஷ்டபு பிரேம்சாகர், சீனிவாஸ் ஆகியோர் உயிரிழந்தனர். சாகர் படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். துபாயில் 2 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்ததும் அவர்களது உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.2 பேரின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய மந்திரி ஜி.கிஷன் ரெட்டி கூறும்போது, தெலுங்கானாவைச் சேர்ந்த 2 இளைஞர்கள், துபாயில் கொடூரமாக கொல்லப்பட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது
இதுதொடர்பாக வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கரிடம் பேசினேன். பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு முழு ஆதரவையும், உடலை உடனடியாக தாயகம் கொண்டு வருவதற்கும் அவர் உறுதியளித்துள்ளார், இந்த விஷயத்தில் விரைவான நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்ய வெளியுறவு அமைச்சகம் பாடுபடும் என்றார்.
கொல்லப்பட்ட பிரேம்சாகர் கடந்த 6 ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வந்தார். கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தைப் பார்த்துவிட்டு சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்