முல்லைத்தீவில் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைப்பு!
தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் தேசிய நீர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் சமூக நல செயற்றிட்டமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் இன்று (28.03) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் விநியோகக் குழாயினை பாவனைக்காக திறந்து வைத்ததுடன் புதிய நீர் விநியோகக் குழாய் பதிப்பு நிர்மாண வேலையையும் இராஜாங்க அமைச்சர் இன்றைய தினம் ஆரம்பித்து வைத்தார்.
குடிநீர் விநியோகத் திட்டம் இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டதனை தொடர்ந்து புதிய நீர் விநியோக குழாய் பதிப்பு நிர்மாண வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் கலந்து கொண்ட அதிதிகளால் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாவமைப்புச் சபையின் வடக்கு/வடமத்திய மாகாண மேலதிக பொது முகாமையாளர் தி.பாரதிதாசனின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் மணிவண்ணன் உமாமகள் , கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஜெயக்குமார் ராசஜோகினி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.