விமான விபத்து குறித்து சந்தேகம்: விசாரணை கோருகிறார் மம்தா பானர்ஜி!
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் Ajit Pawar பயணித்த விமானம் விபத்துக்குள்ளான விவகாரம் தொடர்பில் அரசியல் களத்தில் பல கோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
மேற்படி விபத்து குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி Mamata Banerjee சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று காலை 8.45 மணி அளவில் விமான விபத்தில் உயிரிழந்தார்.
சிறிய ரக விமானம் ஒன்றில் மும்பையில் இருந்து பாரமதி சென்றபோது விமானம் விபத்துக்குள்ளானது. அவருடன் சென்ற மேலும் 4 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து மம்தா பானர்ஜி சந்தேகத்தை எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி,
‘‘எதிர்க்கட்சிகளின் நிலை என்னாகுமோ என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் ஆளும் கட்சியுடன்தான் (பாஜக) இருந்தார்.
ஆனால், அஜித் பவார் பாஜக அணியில் இருந்து விலகத் தயாராக உள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பு வேறொரு கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் அறிக்கை அளித்ததாக நான் அறிந்தேன்.
இந்நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் முறையான விசாணையை நான் கோருகிறேன்.” – என்றார்.
மம்தாவின் இந்தக் கருத்தை பாஜக எம்பி கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சித்து, இத்தருணத்தில் அரசியல் பேசுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
போதிய வெளிச்சமின்மை மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் இந்த விபத்து நேரிட்டதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




