இந்த 4 பேர் வேண்டாம் – பிசிசிஐ சந்திப்பில் கம்பீர் முடிவு?
இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 3-0 எனக் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம், இந்திய அணியைச் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் வாஷ்-அவுட் செய்து சாதனைப் படைத்தது நியூஸிலாந்து அணி.
இந்த தொடர் தோல்வியின் மூலம் இந்திய அணி மீது ரசிகர்கள் கடும் விமர்சனத்தை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீரை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் ஒரு தரப்பு ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு பிசிசிஐ ஒரு மீட்டிங் போட்டதாகக் கூறப்படுகிறது. அதில், தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் டெஸ்ட் அணியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் எனவும் முக்கிய வீரர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார் என பிசிசிஐ வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அந்த மீட்டிங்கில் கம்பீர் கூறியதாக கூறப்படுவது என்னெவென்றால், ‘வரும் 2025-ம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்தவுடன் 2027-ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கி விடும். அதனால், அணியில் மூத்த வீரர்களாக இருக்கும் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் அப்போது டெஸ்ட் போட்டிகள் விளையாடுவார்களா என்பது சந்தேகம் தான்.
இதனால், அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களை அணியின் சேர்க்க வேண்டும். அதன்படி, ஜடேஜா மற்றும் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேலும், ரோஹித் மற்றும் கோலிக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோரை அணியில் சேர்க்க வேண்டும்’ என கம்பீர், பிசிசிஐயிடம் கூறி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், இவர்களை இப்போது முதல் இந்திய அணியில் விளையாட வைத்தால் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் போது பக்குவமடைவார்கள் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆஸ்திரேலிய அணியுடனான பார்டர் கவாஸ்கர் தொடருக்குப் பிறகு இந்திய அணி பங்கேற்கும் டெஸ்ட் தொடர்களில் இந்த 4 வீரர்களும் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.