டொலர் தான் ராஜா – சவால் விடுக்கும் நாடுகள் விலையை கொடுக்க நேரிடும்! டிரம்ப் எச்சரிக்கை

“அனைத்து நாடுகளுக்குமான வர்த்தகத்திற்கு டொலர் தான் ராஜா” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், பிரிக்ஸ் கூட்டமைப்பு அமெரிக்க டொலருக்கு சவால் செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்றும், அதனால் அந்த அமைப்பில் உள்ள நாடுகள் விரைவில் 10 சதவிகித வரி விதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறினார்.
“டொலருக்கு சவால் காட்டும் நாடுகள் அதற்கான விலையை கொடுக்க நேரிடும். ஆனால், அவர்கள் அந்த விலையைச் செலுத்தத் தயாராக இல்லை. பிரிக்ஸ் நாடுகள் தற்போது உடைந்துவிட்டன. வெறும் ஒரு அல்லது இரண்டு நாடுகள் மட்டுமே தற்போது கூட்டாக இயங்கி வருகின்றன,” என டிரம்ப் குற்றம்சாட்டினார்.
“அவர்கள் எனக்கெதிராக விளையாட முயல்கிறார்கள். ஆனால், எனக்கும் விளையாட்டு காட்டத் தெரியும். டாலருக்கு சவால் என்றால், அது நிஜமான விளையாட்டு அல்ல. அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.” என குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் கருத்துக்கள், உலகளாவிய நாணய ஆதிக்கத்தைப் பற்றி மீண்டும் விவாதங்களை எழுப்பி உள்ளன. பிரிக்ஸ் நாடுகள் டொலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை உருவாக்கும் முயற்சி செய்கிற நிலையில், அமெரிக்காவின் எதிர்வினை தொடர்ந்து வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.