அரசாங்கத்திற்கு பரத் அருள்சாமி எச்சரிக்கை
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீடமைப்புப் பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் எனத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பரத் அருள்சாமி வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட 50 இலட்சம் ரூபா வீடமைப்புத் திட்டத்தில் மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்திய வீடமைப்புத் திட்டம் என்பது லயன் அறைகளை ஒழிப்பதற்கான ஒரு நீண்டகாலத் திட்டம் என்றும், அதனை அரசாங்கத்தின் பேரிடர் நிவாரணக் கடமைகளுடன் இணைக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து நிலத்தைப் பொறுப்பேற்க அரசாங்கத்திற்குச் சட்ட ரீதியான அதிகாரம் உள்ள நிலையில், அதனைச் செய்யத் தவறுவது அரசியல் உறுதிப்பாடற்ற தன்மையையே காட்டுகிறது எனச் சுட்டிக்காட்டிய அவர், மலையக மக்களையும் இந்நாட்டின் சமமான பிரஜைகளாகக் கருதுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.





