முன்னாள் இந்திய மல்யுத்த அமைப்பின் தலைவரின் மனு நிராகரிப்பு
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் வழக்கு தொடர்பாக பாஜக எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த காலகட்டத்தில் பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரியில் இது தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இதையடுத்து, அவர் மல்யுத்த சம்மேளன தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு புதிய தலைவர் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், நாடு முழுவதும் கண்டனம் வலுத்ததை அடுத்து போலீசார் பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.
இறுதி கட்ட விசாரணை ஏப்.18ம் தேதி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் பிரியங்கா ராஜ்புத் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது பிரிஜ் பூஷணுக்காக ஆஜராகியிருந்த வழக்கறிஞர், “பாலியல் வன்கொடுமை வழக்கை மேலும் தீவிரமாக விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கையை வைத்தார். எனவே இந்த வழக்கின் உத்தரவு ஒத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று இந்த வழக்கு குறித்து உத்தரவு வெளியாகியுள்ளது. அதில் பிரிஜ் பூஷண் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை என்றும், பூஷண் மீதான பாலியல் வழக்கில் மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.