இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பெட்ரோலிய குழாய் அமைப்பது குறித்து கலந்துரையாடல்!
தலைமன்னார் – ராமேஸ்வரம் , நாகப்பட்டினம் – காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களுக்கு இடையிலான படகு சேவையை ஆரம்பிப்பதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் போக்குவரத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிலையில் அந்நாட்டின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். இதன்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான போக்குவரத்தின் புதிய வழிகளை ஆராய்வது இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்பார்க்கும் வகையில் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை எரிசக்தி மையமாக, கைத்தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு மலிவு மற்றும் நம்பகமான எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வதற்காக தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு பல தயாரிப்பு பெற்றோலியக் குழாய் அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கல்வித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, இந்திய ஆதரவுடன் புதிய உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.