பேரிடரால் சேதமடைந்த மதத் தலங்களை மீள கட்யெழுப்பும் திட்டம் ஆரம்பம்!
டித்வா சூறாவளியால் சேதமடைந்த அனைத்து மதத் தலங்களையும் அவற்றின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (27) ஆரம்பமானது.
கம்பளை, தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு,
“நமது நாடு அண்மையில் ஒரு பாரிய பேரழிவைச் சந்தித்தது. அந்தப் பேரழிவு அண்மைய இலங்கை வரலாற்றில் மிகப் பாரிய இயற்கை பேரழிவாகும்.
சுமார் இரண்டாயிரம் மண்சரிவுகள் பதிவாகியுள்ளன. ஏராளமான மனித உயிர்களையும் இழந்தோம். அதிகளவான சொத்துகள், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தோம்.
எனவே, நம் நாட்டு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதில், அரசாங்கம் என்ற வகையில் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் என்ற வகையில் நம் அனைவருக்கும் ஒரு சவால் இருந்தது.
இன்று அந்த சவாலை நாம் குறிப்பிடத்தக்க அளவிற்கு வென்றுவிட்டதாக நான் நினைக்கிறேன்.
நாம் இன்னும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க வேண்டும்.
மீண்டும் பொருளாதார வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க தேவையான வேலைத்திட்டங்களை நாங்கள் தயாரித்துள்ளோம்.
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தேவையான திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
இந்த மாதம் பெப்ரவரி 10 ஆம் திகதி சம்பளம் பெறும்போது, தோட்டங்களில் பணிபுரியும் மக்கள் ஒரு நாளைக்கு 1,750 ரூபா சம்பளம் பெறுவார்கள். “ – என்றார்.





