பெலாரஸிற்கும் (Belarus) இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை!
பெலாரஸ் (Belarus) குடியரசிற்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் தேசிய விமான நிறுவனமான பெலாவியா (Belavia ) – பெலாரஷ்யன் ஏர்லைன்ஸ், மின்ஸ்க் (Minsk) மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையே நேரடி விமானங்களை இன்று தொடங்கியுள்ளது.
இது பெலாரஸ் மற்றும் இலங்கை இடையேயான விமான இணைப்பை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.
வாராந்திர விமானங்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இயக்கப்படும். இதன்படி விமானங்கள் இயக்கப்படும் நேர அட்டவணை வருமாறு,
மின்ஸ்க் → மத்தள – புறப்பாடு: 02:10, வருகை: 14:00
மத்தள → மின்ஸ்க் – புறப்பாடு: 16:00, வருகை: 23:30
281 இருக்கைகள் கொண்ட A330-200 விமானத்தால் இயக்கப்படும் தொடக்க விமானம், 277 சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு பிற்பகல் 1:50 மணிக்கு மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை (MRIA) வந்தடைந்தது. குறித்த விமானத்தை பாரம்பரிய நீர் பீரங்கி வணக்கத்துடன் இலங்கை விமான சேவை வரவேற்றது.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் (SLTPB) ஏற்பாடு செய்த கண்டியன் நடன நிகழ்ச்சிகளுடன் பயணிகள் வரவேற்கப்பட்டனர் மற்றும் இலங்கையின் தனித்துவமான விருந்தோம்பலை வெளிப்படுத்தும் வகையில் இலங்கை தேயிலை வாரியத்தால் சிலோன் தேநீர் பரிசுகளை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.





