டாக்காவின் முன்னாள் காவல்துறை தலைவர் மற்றும் இருவருக்கு மரண தண்டனை விதிப்பு
வங்கதேச(Bangladesh) நீதிமன்றம், டாக்காவின்(Dhaka) முன்னாள் காவல் துறைத் தலைவர் மற்றும் இரண்டு மூத்த அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா(Sheikh Hasina) பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு வழிவகுத்த 2024ம் ஆண்டு போராட்டங்களின் போது ஆறு போராட்டக்காரர்களை கொன்றதற்காக இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் டாக்கா பெருநகர காவல்துறை(DMP) ஆணையர் ஹபிபூர் ரஹ்மான்(Habibur Rahman), முன்னாள் இணை ஆணையர் சுதிப் குமார் சக்ரபோர்ட்(Sudip Kumar Chakrabort) மற்றும் முன்னாள் கூடுதல் துணை ஆணையர் ஷா ஆலம் முகமது அக்தருல் இஸ்லாம்(Shah Alam Mohammad Akhtarul Islam) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்களை தொடர்ந்து, ஐந்து முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
ராம்னா(Ramna) மண்டலத்தின் முன்னாள் உதவி ஆணையர் முகமது இம்ருல்க்கு(Mohammad Imrul) ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் காவல் நிலைய ஆய்வாளர் முகமது அர்ஷத் ஹொசைனுக்கு(Mohammad Arshad Hossain) நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கான்ஸ்டபிள்களான சுஜன் மியா(Sujan Mia), இமாஸ் ஹொசைன் எமோன்(Imas Hossain Emon) மற்றும் நசிருல் இஸ்லாம்(Nasirul Islam) ஆகியோருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, ஆகஸ்ட் 5, 2024 அன்று டாக்காவின் சங்கர்புல்(Shankarpul) பகுதியில் ஆறு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டது தொடர்பானது, அந்த நாளில் ஷேக் ஹசீனா தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.




