பேரழிவை ஏற்படுத்திய மியன்மார் நிலநடுக்கம் : 10,000 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு – எச்சரிக்கும் அமெரிக்க அதிகாரிகள்!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் நாட்டையே பேரழிவிற்கு உட்படுத்தியதை அடுத்து, அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் நிலநடுக்கத்தின் இடம் மற்றும் அளவைப் பொறுத்து “10,000 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்க வாய்ப்பு உள்ளது” என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பேரழிவின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள இரண்டாவது நகரமான மண்டலேயில் பல சடலங்கள் குவிந்து கிடந்ததாகவும், அவை “குவியல்களாக எரிக்கப்பட்டதாகவும்” தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் உணவு மற்றும் நீர் விநியோகம் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது, இது ஒரு பரந்த மனிதாபிமான பேரழிவு குறித்த அச்சத்தைத் தூண்டியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,719 பேர் உயிரிழந்ததாக ஆளும் இராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் நேற்று தெரிவித்திருந்த நிலையில் இந்த கருத்துக்கள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.