இலங்கை வந்த சீனப் பிரஜை நாடு கடத்தல்!
இலங்கை வந்த சீனப் பிரஜை மீண்டும் சீனாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
போலி வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் நாடு கடத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் நேற்றைய தினம் நாடு கடத்தப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கினி ராஜ்ஜியத்தின் வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் அண்மையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சித்த குறித்த சீன பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார்
இதனையடுத்து, அவர் சீன வெளிநாட்டு கடவுச்சீட்டை காண்பித்துள்ளார். இதன்பின்னர், அவருக்கு நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டது.
எவ்வாறாயினும், இந்த விடயம் சர்ச்சைக்குரியதாக மாறியதை அடுத்து குறித்த சீனப் பிரஜை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.
கைதான சீனப் பிரஜை, தம்மை சொந்த நாட்டிற்கு நாடு கடத்தாது, டுபாய்க்கு நாடு கடத்துமாறு கோரி நீதிப்பேராணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்வதற்காக சீன நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் என விசாரணைகளில் தெரியவந்தது. இதனையடுத்து, குறித்த சீனப் பிரஜை மீண்டும் அந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.