கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்பை கண்டிக்கும் வகையில் சின்னத்தை மாற்றிய டென்மார்க் மன்னர்
அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்டு ட்ரம்ப், பதவியேற்க உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே அவர் பல்வேறு திட்ட அறிவிப்புகளையும் கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், டென்மார்க் நாட்டிற்கான அமெரிக்கத் தூதரை அறிவித்த ட்ரம்ப், ”கூடவே நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலகம் முழுவதற்குமான சுதந்திரம் ஆகியவற்றுக்காக கிரீன்லாந்து மீதான உரிமையும் கட்டுப்பாடும் மிகவும் அவசியம் என்று அமெரிக்கா கருதுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
அதாவது, ”டென்மார்க் நாட்டிடமிருந்து அமெரிக்காவுக்காக கிரீன்லாந்தை விலைக்கு வாங்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த முறை அதிபராக இருந்தபோது முயன்று முடியாமல்போன இந்த விஷயத்தை மீண்டும் தோண்டி எடுத்துள்ளார். இது, விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அதற்கு கிரீன்லாந்தின் பிரதமர் முச்ச பெ ஈகே பதிலடி கொடுத்தார். ”கிரீன்லாந்தை அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது பற்றிய ட்ரம்பின் தற்போதைய பேச்சும், அவருடைய முந்தைய ஆட்சிக்காலத்தில் சொன்னதைப் போலவே பொருளற்றது. கிரீன்லாந்து எங்களுடைய நாடு. நாங்கள் விற்பனைக்கு அல்ல: ஒருபோதும் விற்பனைக்கு இணங்க மாட்டோம்” என அவர் தெரிவித்திருந்தார்.
அதேநேரத்தில், இதற்கு டென்மார்க் நாட்டின் பிரதமரோ அல்லது வெளியுறவுத் துறை அமைச்சகமோ இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது டென்மார்க் மன்னர் ஃபிரடெரிக், நாட்டின் கோட் ஆஃப் ஆர்ம்ஸ் சின்னத்தை மாற்றியமைத்து ட்ரம்புக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்த அரச கோட் ஆஃப் ஆர்ம்ஸ் சின்னத்தில் குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, புதிய சின்னத்தில் கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளைக் குறிக்கும் ஒரு துருவ கரடி மற்றும் ஆடு குறியீடு இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 500 ஆண்டுகளாக இருந்த சின்னம் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன் இடையே உள்ள கல்மார் யூனியன் மரபை குறிக்கும் விதமாக முந்தைய அரச கோட்கள் ஆப் ஆர்ம்ஸ் சின்னம் இருந்த நிலையில் தற்போது அதை மாற்றியுள்ளது டென்மார்க் அரசு. இதன்மூலம், அந்தப் பகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான டென்மார்க் முயன்றுள்ளது தெளிவாகியுள்ளது.
மேலும் கடந்த புத்தாண்டுச் செய்தியின்போது பேசிய மன்னர் ஃபிரடெரிக், ”நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம், நாம் ஒவ்வொருவரும் டென்மார்க் இராஜ்ஜியத்திற்காக அர்ப்பணித்துள்ளோம். ராஜ்யத்திற்கு வெளியே கிரீன்லாந்து வரை நாம் ஒன்றாக இருக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.